×

குன்றத்தூர், காஞ்சிபுரம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் பள்ளிகளில் தேங்கிய மழைநீரால் மாணவர்கள் பாதிப்பு

பெரும்புதூர், அக்.31: குன்றத்தூர் ஒன்றியம் சாலமங்கலம் ஊராட்சியில் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரால் மாணவர்கள் கடும் பாதிப்படைந்தனர். குன்றத்தூர் ஒன்றியம் சாலமங்கலம் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சாலமங்கலம், சாலமங்கலம் காலனி, நரியம்பக்கம், லட்சுமி நகர், பாலாஜி நகர் உள்பட பல பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மேலும் இந்த பள்ளி ஒட்டி அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலா மழை பெய்து வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால், மேற்கண்ட பள்ளி வளாகத்தில் மழைநீர் செல்ல போதிய கால்வாய் வசதி இல்லாததால், வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதையொட்டி மாணவ, மாணவிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

சாலமங்கலம் நடுநிலைப்பள்ளிக்கு கடந்த சில ஆண்டு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது சாலையில் இருந்து பள்ளி தாழ்வானதாக உள்ளது. இதனால் மழைநீர் செல்ல போதிய வசதி இல்லை. மழைக்காலத்தில் பள்ளி வளாகத்தில் மழைநீர் குட்டைபோல் தேங்கி விடுகிறது. தொடர்ந்து மழை பெய்தால் பள்ளி வகுப்பறையில் உள்ளே மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் மழைக்காலத்தில் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.இதுகுறித்து குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலரிடம் பலமுறை தகவல் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே மாவட்ட பள்ளி கல்வி துறை அதிகாரிகள், மேற்கண்ட பள்ளியில் ஆய்வு செய்து, அங்கு மழைநீர் தேங்காமல் இருக்க மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும். தற்காலிகமாக பள்ளி வளாகத்தில் மண் கொட்டி நிரப்பி தண்ணீர் தேங்காத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்துகின்றனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் அமைந்துள்ள காஞ்சிபுரம் பிஎஸ் சீனிவாசா நகராட்சி பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

காஞ்சிபுரம் சேக்குபேட்டை கவரை தெருவில் பிஎஸ் சீனிவாசா நகராட்சி மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு 6 முதல் பிளஸ் 2 வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளி வளாகத்திலேயே ராணி அண்ணாதுரை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் முறையான வடிகால் வசதி இல்லாததால், அடிக்கடி மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பள்ளி வளாகத்தில் பல நாட்களாக தேங்கிய மழைநீரால் மாணவர்கள் அவதியடைகின்றனர். தற்போது காஞ்சிபுரத்தில் பெய்து வரும் தொடர்மழையால், பிஎஸ் சீனிவாசா நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பகல் நேரத்தில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. சிறுமழை பெய்தால் கூட வகுப்பறைகள், விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதையொட்டி, மாணவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல், சளி உள்பட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. பள்ளி வளாகத்தில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால் வகுப்பறை கட்டிடங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கட்டிட சுவரில் மழைநீர் வடிந்து வகுப்பறையில் தேங்குவதால், மாணவர்கள் உட்கார இடமில்லாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையிர்ல, ஒவ்வொரு மழைகாலத்திலும் இந்த பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது. இதுபோல் மழைநீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி பல்வேறு மர்ம காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதுடன், படிப்பும், வகுப்பறை கட்டிடங்களும் பாதிக்கப்படும். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தி  விளையாட்டு மைதானத்தில் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் நிலத்தடி நீர்வளம் மேம்பாடு அடைவதுடன் பள்ளி வளாகம் சுகாதாரமானதாக இருக்கும் என்றனர்.
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த படாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து கொண்டே இருந்ததால், பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானம் உள்பட பல இடங்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தன. இதனால் மாணவ, மாணவிகள் மாலை 3 மணியளவில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோன்று மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால், பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் மழையில் நனைந்து கொண்டே வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது. சில மாணவர்கள் தங்களது புத்தக பைகளை பள்ளியில் வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றனர்.

Tags : schools ,Maduranthakam ,Kanchipuram ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...